வாழைப்பொத்தி வறை!
தேவையான பொருட்கள்:
- 1 வாழைப்பொத்தி
- 1 வெங்காயம்
- 2 பச்சைமிளகாய் (-/+)
- 1 ½ தே.க மிளகு சீரகத்தூள் (-/+)
- 1 தே.க மிளகய்த்தூள் (-/+)
- ½ தே.க மஞ்சள் தூள் (-/+)
- ½ கப் தேங்காய்ப்பூ (-/+)
- உப்பு
- கறிவேப்பிலை (-)
தாளிக்க:
- 1 வெங்காயம்
- ½ தே.க கடுகு
- 1 தே.க பெருஞ்சீரகம் / சின்னச்சீரகம்
- கறிவேப்பிலை
- 3 செத்தல்மிளகாய்
- எண்ணை
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனுடன் சிறிது உப்புச் சேர்த்து கலந்து விடவும். அதனுள் வாழைப்பொத்தியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு, நன்றாக கழுவி, வார விடவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவிய தேவையான அளவு தண்ணீர் விட்டு அதனுடன் சிறிது உப்புச் சேர்த்துக் கலந்து அவிய விடவும். தண்ணீர் வற்றியதும், அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
- அவிந்த வாழைப்பொத்தியுடன் தேங்காய்ப்பூ, மஞ்சள்தூள், மிளகுசீரகத்தூள், தனி மிளகாய்த்தூள், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்தும் பிசைந்து குழைத்து வைக்கவும்.
- ஒரு சட்டியில் எண்ணையை விட்டு மிதமான வெப்பத்தில் சூடாக்கவும். அதில் கடுகைப் போடவும். கடுகு பொரிந்து வெடிக்கும் பொழுது, வெங்காயம், பெரும்சீரகம்/ சின்னச்சீரகம், செத்தல்மிளகாய் மற்றும் கருவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி கலர் மாறும் போது, குழைத்து வைத்த வாழைப்பொத்தி கலவையைச் சேர்த்து, வறுத்தெடுக்கவும்.
- சோறு, மரக்கறிகளுடன் சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.
வாழைப்பொத்தி வறை தயார்!!!
குறிப்பு:
- சுவைக்கேற்ப பொருட்களின் அளவுகளை கூட்டுக் குறைக்கவும்.
- வாழைப்பொத்தியை அவிக்காமல் செய்யும்முறை:
- முதலில் தாளித்து, அதனுடன் வாழைப்பொத்தி , இளநீர் / தண்ணீர் சேர்த்து அவிய விடவும். அதன் பின்பு அவிந்த வாழைப்பொத்தியுடன் தேங்காய்ப்பூ, மஞ்சள்தூள், மிளகுசீரகத்தூள், தனி மிளகாய்த்தூள், வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து வறுக்கவும்.
Comments
Post a Comment