பிரிஞ்சி சோறு / சாதம்
தேவையான பொருட்கள்:
- 2 கப் பாஸ்மதி அரிசி
- 1 வெங்காயம்
- 2 தக்காளி
- 5 கிராம்பு
- 1 துண்டு கறுவா பட்டை
- 5 ஏலக்காய்
- 1 கறுப்பு ஏலக்காய்
- 1 அன்னாசிப்பூ
- 5 பிரியாணி இலை
- ½ மே.க பெருஞ்சிரகம்
- 1 மே.க மிளகாய்த்தூள்
- ½ மே.க இறைச்சிச்சரக்குத்தூள்
- ½ தே.க மஞ்சள் தூள்
- 1 பெரிய கரட்
- 25 போஞ்சி
- 1 பெரிய உருளைக்கிழங்கு
- ½ கப் பட்டாணி
- 2 கப் தண்ணீர்
- 2 கப் தேங்காய்ப்பால்
- உப்பு
- 2 மே.க இஞ்சி விழுது
- 2 மே.க உள்ளி விழுது
- 3 பச்சைமிளகாய்
- ½ கப் மல்லிஇலை
- ½ கப் புதினா
- எண்ணை
- நெய்
- பாண்
செய்முறை:
- முதலில் அரிசியைக் களைந்து, தண்ணீர் ஊற்றி, ஊற விடவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளவாட்டில் வெட்டிக் கொள்ளவும். காய்கறிகளை விரும்பிய வடிவில் வெட்டி வைக்கவும். பாணை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு மிதமான தீயில் சூடேற்றவும். அதில் பாண் துண்டுகளை பொரித்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். அதன்பின்பு எண்ணை / நெய் விட்டு, சூடானதும், பெருஞ்சீரகம், கிராம்பு, கறுவா பட்டை, ஏலக்காய், கறுப்பு ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதன் பின்பு தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் உள்ளி விழுதைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லிஇலை மற்றும் புதினா சேர்ந்து கலந்து 2 நிமிடம் வதக்கவும். அதன் பின்பு கரட், உருளைக்கிழங்கு, போஞ்சி மற்றும் பட்டாணி சேர்த்து வதக்கவும்.
- அதன் பின்பு தண்ணீர்,உப்பு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து, கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரிசி மற்றும் இறைச்சிச்சரக்குத்தூள் சேர்த்து கலந்து, மூடி அவிய விடவும். அரிசி அளவிக்கு தேங்காய்ப்பால் கலவை வந்ததும், பிரிஞ்சி சோறு / சாதத்தை கலந்து, மூடி, அடுப்பை அணைத்து 15 நிமிடங்கள் அடுப்பலேயே விடவும்.
- 15 நிமிடங்களின் பின் திறந்து பார்க்கும் பொழுது, அரிசி அவிந்து, மென்மையாகவும் இருக்கும். பிரிஞ்சி சோறு / சாதத்தை கலந்து விடவும். அதன் மேல் நெய்யில் பொரித்த பாண்துண்டுகளை தூவி விடவும்.
- சுடச் சுட தயிர் சம்பலுடன் சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.
பிரிஞ்சி சோறு / சாதம் தயார்!
குறிப்பு:
- 1 பங்கு அரிசிக்கு 2 பங்கு தண்ணீர் ( தண்ணீர் + தேங்காய்ப்பால்), அரிசியின் தரத்தைப் பொறுத்து தண்ணீர் அளவு மாறுபடும்.
- பிரிஞ்சி சோறு / சாதத்திற்க்கு வெங்காயம் மற்றும் மரக்கறிகள் நன்றாக வதக்க வேண்டியதில்லை.
Comments
Post a Comment