மீன் பிரியாணி!
தேவையான பொருட்கள்:
- 2 சுண்டு பசுமதி அரிசி
- 800 மி.லீ தண்ணீர்
- 100 மி.லீ தேங்காய்ப்பால்
- 1 கப் தண்ணீர் (மசாலா அவிய விட)
- ½ மே.க கடுகு
- ½ மே.க சின்னச்சீரகம்
- 5 ஏலக்காய்
- 1 மே.க மிளகு (விரும்பினால்)
- 1 அன்னாசிப்பூ
- 1 துண்டு கறுவாபட்டை
- 5 கராம்பு
- 2 பிரியாணி இலை
- 300 கிராம் வெங்காயம்
- 3 தக்காளி
- ½ உள்ளி
- 1 இஞ் இஞ்சி
- 1 மே.க கரம்மசாலா
- 2 மே.க செத்தல்தூள்
- 1 மே.க மல்லித்தூள்
- ½ மே.க சீரகத்தூள்
- 1 தே.க மஞ்சள்
- உப்பு
- கறிவேப்பிலை
- 1 கைபிடி மல்லிஇலை
- புதினாஇலை (விரும்பினால்)
- 5 பச்சைமிளகாய் (விரும்பினால்)
- நெய்
- எண்ணை
மீன் மசாலா:
- 1 ¼ கிலோ மீன்
- 1 மே.க செத்தல்தூள்
- 1 தே.க மஞ்சள்
- உப்பு
- தேசிப்புளி
- மீனை சுத்தம் செய்து “மீன் மசாலா” பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து, 30 நிமிடங்கள் (குறைந்தது 15 நிமிடங்கள்) ஊற வைக்கவும்.
- அரிசியைக் கழுவி தண்ணீர் விட்டு குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- இஞ்சி மற்றும் உள்ளியை அரைத்து அல்லது இடித்து வைக்கவும்.
- வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டி வைக்கவும்.
- ஊற வைத்த மீனைப் பொரித்து எடுக்கவும். அதே பாத்திரத்தில் நெய் / எண்ணை விட்டு மிதமான தீயில் சூடாகாக்கவும். அதில் கடுகைப் போடவும், கடுகு வெடிக்கத் தொடங்கும் போது அதில் சின்னச்சீரகம், ஏலக்காய், மிளகு, அன்னாசிப்பூ, கறுவாபட்டை, கராம்பு, பிரியாணி இலை, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், வெட்டி வைத்த தக்காளி மற்றும் இஞ்சி உள்ளி விழுதைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் செத்தல்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தக்காளிக் கலவையில் விட்ட தண்ணீர் வற்றி பிரண்டு வரும் பொழுது, அதில் அரிசி, கரம்மசாலா, உப்பு, மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து, தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பாலை விட்டுக் கலந்து, மூட அவிய விடவும்.
- அரிசி அளவிற்க்கு தண்ணீர் வற்றியதும், பிரயாணியைக் கலந்து, உப்பு சுவை பார்த்து, பச்சை மிளகாய் மற்றும் மீன் துண்டுகளை (அரைப் பங்கு மீன் துண்டுகள்) அரிசியின் மேல் வைத்து, விரும்பினால் சிறிது மல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, அடுப்பை அணைத்து, அப்படியே அடுப்பில் 10 நிமிடங்கள் மூடி விடவும். மீன் பிரியாணியுடன் மீன் பொரியல் மற்றும் வெங்காயம் சம்பல் சேர்த்து பரிமாறவும்.
சுடச் சுட மீன் பிரியாணி தயார்!!!
Comments
Post a Comment