தட்டை வடை!
தேவையான பொருட்கள்:
- 1 சுண்டு உளுந்து
- 2 சுண்டு கோதுமை மா
- 3 மே.க வெட்டுத்தூள் (-/+)
- 2 மே.க மிளகாய்த்தூள் (-/+)
- 2 மே.க பெருஞ்சீரகம்
- ¼ கப் வெட்டிய வெங்காயம்
- 2 நாட்டு கறிவேப்பிலை
- தண்ணீர்
- உப்பு
- எண்ணெய்
செய்முறை :
- உளுந்தைக் கழுவி 3 மணித்தியாளங்கள் ஊற வைக்கவும். உளுந்து ஊறியதும், வார விடவும்.
- வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- ஒருபாத்திரத்தில் உளுந்தைப் போடவும். அதனுடன் கோதுமை மாவை, பெருஞ்சீரகம், உப்பு, வெட்டுத்தூள், மிளகாய்த்தூள், வெட்டி வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, நன்றாக குழைக்கவும். அடுத்ததாக தண்ணீரைச் சிறிது சிறிதாகத் தெளித்து, நன்றாகக் குழைக்கவும். அதன் பின்பு 2 மே.க எண்ணை சேர்த்து குழைக்கவும். குழைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான வெப்பத்தில் சூடேற்றும்.
- ஒரு ரின்பால் பேணியின் அடிப் பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பேப்பர் விரிக்கவும். அதன் மேல் வடை மா உருண்டையை வைக்கவும். கையை தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் வடை மாவை அழுத்தி /தட்டி வட்டமாக்கி (மெல்லியதாக), சூடான எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும். அதே மாதிரி ஒவ்வொரு வடையாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பிரித்தெடுக்கவும்.
- பொரித்த வடையை வடியில் போட்டு எண்ணை வார விட்டு எடுக்கவும். இந்த அளவில் செய்ய அண்ணளவாக 75 வடை கிடைக்கும்.
தட்டை வடை தயார்!
குறிப்பு:
- 1 சுண்டு = 1 ரின்பால் (397 கிராம்) பேணியில் மேவி அளப்பது.
- உங்களின் சுவைக்கேற்ப மிளகாய்த்தூள், பெருஞ்சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் மாவின் அளவை கூட்டிக் குறைக்கவும்.
- வடையை தண்ணீரில் கையை நனைத்து தட்டுவதற்கு பதிலாக எண்ணையில் தொட்டும் வடையாக தட்டலாம். 2 பிளாஸ்டிக் பேப்பருக்கு நடுவில் வைத்து, உருட்டுக் கட்டையால் உருட்டி, விரும்பிய அளவில் வெட்டியும் எடுக்கலாம் அல்லது சப்பாத்தி மேக்கரின் வைத்து அமத்தியும் செய்யலாம்.
- ஒவ்வொரு வடையாக தட்டி எண்ணையில் போட கஸ்டமாக இருந்தால், வடைகளை தட்டி வைத்தும் பொரிக்கலாம்.
Comments
Post a Comment