ஆட்டிறைச்சி பிரியாணி!

 


தேவையான பொருட்கள்:

பிரியாணி மசாலா:

  • 7 செத்தல் மிளகாய் 
  • 7 கராம்பு
  • 5 ஏலக்காய்
  • 2 துண்டு கறுவா
  • 1 கறுப்பு ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • ¼ சாதிக்காய்
  • 1 ஜாவித்திரி
  • 3 தே.க மல்லி
  • 1 தே.க மிளகு
  • 1½ தே.க சின்னச்சீரகம்
  • ½ தே.க காரவே விதை / ஷாஜீரா
  • ½ தே.க பெருஞ்சீரகம்


சோறு:

  • 750 கிராம் அரிசி
  • 1 தே.க மிளகு
  • 2 பிரியாணி இலை
  • 1 துண்டு கறுவா
  • 5 கராம்பு
  • 1 அன்னாசிப்பூ
  • 1 ஜாவித்திரி
  • 3 ஏலக்காய்
  • ½ தே.க சின்னச்சீரகம்
  • ½ தே. க காரவே விதை / ஷாஜீரா
  • 1 தே.க நெய் 
  • உப்பு
  • தண்ணீர்


பிரியாணி கறி:

  • 1¼ கிலோ ஆட்டிறைச்சி 
  • 1 துண்டு கறுவாப்பட்டை 
  • 1 பிரியாணி இலை
  • 3 ஏலக்காய்
  • 300 கிராம் வெங்காயம்
  • 3 தக்காளி
  • ½ தே.க மஞ்சள்
  • 1½ மே.க மிளகாய்த்தூள்
  • 2 மே.க இஞ்சி உள்ளி விழுது
  • உப்பு 
  • எண்ணை
  • 1 கைபிடி மல்லிஇலை
  • 1 கைபிடி புதினாஇலை
  • 1 கப் தயிர் 
  • ¼ கப் தண்ணீர்


மேலதிக பொருட்கள்:

  • ½ தே.க கரம்மசாலா 
  • பச்சை மிளகாய்
  • கலரிங் / குங்குமப்பூ
  • 3 மே.க தண்ணீர் / பால்
  • நெய்


செய்முறை:

  1. அரிசியைக் கழுவி, 30 நிமிடங்கள் ஊற விடவும். ஒரு தாச்சியில் பிரியாணி மசாலாப் பொருட்களைப் போட்டு, வாசனை வரும் வரை வறுக்கவும். அதனை ஆற விட்டு, தூளாக அரைத்து வைக்கவும்.
  2. வெங்காயம் மற்றும் தக்காளியை நீளமாக வெட்டி வைக்கவும். பச்சைமிகாயை நடுவில் கீறி விடவும். மல்லி புதினாவை கழுவி, வார விட்டு, வெட்டி வைக்கவும். 
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணை ஊற்றி, மிதமான வெப்பத்தில் சூடாக்கவும். அதில் அரைப் பங்கு வெங்காயத்தை பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  4. அதே பாத்திரத்தில் மீதயாக உள்ள வெங்காயம், கறுவாப்பட்டை, பிரியாணி இலை மற்றும் ஏலக்காய் சேர்த்து, வெங்காயம் கலர் மாறும் வரை வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். எண்ணை பிரிந்து வரும் போது, ஆட்டிறைச்சி, இஞ்சி உள்ளி விழுது, மஞ்சள், மிளகாய்த்தூள், பிரியாணி மசாலா மற்றும் உப்புச் சேர்த்துக் கலந்து வதக்கவும். அதனை மிதமான வெப்பத்தில் மூடி 10 நிமிடங்கள் அவிய விடவும். அதனுடன் தயிர் மற்றும் அரைப் பங்கு மல்லி புதினாக் கலவை சேர்த்துக் கலந்து, தேவைப்பட்டால் ¼ கப்  தண்ணீர் சேர்த்து, எண்ணை வெளி வரும் வரை மூடி அவிய விடவும்.
  5. ஒரு பாத்திரத்தில், அரிசி அவியும் அளவிற்கு தண்ணீர் மற்றும் நெய் விட்டு, அரிசி மசாலாப்  பொருட்கள் மற்றும் உப்புச் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும், அரிசியைச் சேர்த்து அண்ணளவாக 10 நிமிடங்கள் அவிய  விடவும் அல்லது அரிசி ¾ பதம் அவிந்ததும், தண்ணீரை வடித்து விடவும்.
  6. பிரியாணி மசாலாக் கறியில் இருந்து எண்ணை பிரிந்து வந்ததும், உப்பு சுவை பார்த்துக் கறியைக் கலந்து விட்டு, அரைப் பங்கு கறியை வேறாக எடுத்து வைக்கவும். 
  7. பாத்திரத்தில் உள்ள மீதிக் கறியின் மேல், அரைப் பங்கு சோற்றைச் சேர்த்து பரவி விடவும். அதன் மேல் மீதிக் கறியை பரப்பி விட்டு, சிறிது மல்லி புதினாக் கலவை மற்றும் பொரித்த வெங்காயம் தூவி, அடுத்ததாக அதன் மேல் மீதி சோற்றைச் சேர்த்து பரவி விடவும். அதன் மேல் மீதியாக உள்ள மல்லி புதினாக் கலவைத் தூவவும். அதன் மேல் பொரித்த வெங்காயத்தை தூவி, பச்சைமிளகாய்களை அடுக்கவும். சிறிது கரம் மசாலாவை தூவவும். கடைசியாக நெய்யை விடவும். விரும்பினால் குங்கும்ப்பூவை பால் / தண்ணீரில் ஊற விட்டு அல்லது கலரிங்கை தண்ணீரில் கரைத்து விடவும்.
  8. சிறு தீயில் 10 நிமிடங்கள் மூடி அவிய விட்டு, அடுப்பை அணைத்து, பாத்திரத்தை அடுப்பில் 15 நிமிடங்கள் விட்டவும். 
  9. ஆட்டிறைச்சி பிரியாணியுடன் தக்காளி வெங்காயச் சம்பல் மற்றும் அவித்த முட்டை சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.


ஆட்டிறைச்சி பிரியாணி தயார்!!!


குறிப்பு: 

  • உங்கள் சுவைக்கேற்ப மசாலா அளவுகளை கூட்டிக் குறைக்கவும். காரவே விதை / ஷாஜீரா சேர்க்காமலும் பிரியாணி செய்யலாம்.
  • அரிசியின் தன்மைக்கேற்ப அவியும் நேரம் மாறு படும்.
  • பிரியாணிக் கறி இறுக்கமாக இருந்தால் பிரியாணி அடிப்பிடிக்கும், அதனால் சிறிது தண்ணித் தன்மையாக கறியை வைக்கவும்.
  • மேலே உள்ள செய்முறை மின்சார அடுப்பில் செய்யும் முறை.















Comments